Pages

Tuesday 5 July 2011

7. பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!


முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ் மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம் இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம்.
 
இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் நாம் காணக்கூடிய சிறப்பம்சம்  நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமான பள்ளிவாசல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தன. ஒவ்வொரு பள்ளி வாசல்களும் ஒரு அறிவுபீடமகவே திகழ்ந்தன.
 
மருத்துவம் தவிர்த்து ஏனைய துறைகளெல்லாம் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் தான் போதிக்கப்பட்டன.
 
இவ்வுலகில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அல் அஹ்ஸர் பல்கலைக் கழகம் (கி.பி 970) பள்ளிவாசலோடு இணைந்து உருவான உன்னத அறிவு பீடமாகும். ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் கலிபா அப்துல் அஜிஸ் அவர்களால் அல் அஹ்ஸர் பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 35 உலமாக்கள் தங்கி இருப்பதற்கான இல்லமொன்று நிறுவபெற்றது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இந்த அறிஞர்கள் அல் அஹ்ஸர் பள்ளியில் உரை நிகழ்த்தி வந்தார்கள். இதிலிருந்து தான் அப் பல்கலைகழகம் உருவாகியது. இப்பல்கலை கழக நூலகத்தில் கிடைப்பதற்கு அறிய பல கையெழுத்து பிரதியில் ஆன நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 
மொரோக்கோ வின்  பண்டைய தலைநகரம் பெஸ் (FEZ) இல் கி.பி 859 இல் எழுந்த அல் கரவயீன் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கதாகும். இது வணக்க தளமாகவும், சிறந்த கல்வி கூடமாகவும் விளங்கியது. இங்கு தான் அன்றைய உலகின் புகழ்மிக்க வானவியல் மற்றும் கணித அறிஞர்களும் ஆய்வு நிகழ்த்தினார்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிகனஸ் போன்ற பேரறிஞர்களில் பெயர்கள் இப்பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளன. இங்கும் சுமார் 16000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் பாதுக்ககபட்டு வருகின்றன.
 
இதேபோல் அல் ஹக்கீம் என்பவருடைய நூலகம் நாற்பது அறைகளை கொண்டு இயங்கி வந்தது. இங்கு சுமார் 18.000 நூல்கள் அன்றைய காலகட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
 
ஈராக் தலைநகர் பாக்தாத் இல் ஷாக்பூர் என்பவர் 1.00.000 மேற்பட்ட நூல்களை கொண்டு நூலகம் ஒன்றை நிறுவி இருந்தார்.
 
இதேபோல் கலிபாகளும், பல தனியாரும் அமைத்த நூலகங்களின் விபரம் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காண கிடைக்கின்றன.
 
நபிகள் நாயகம் அவர்கள் தமது காலத்தில் சமுக, கலாச்சார, அரசியல் நடவடிகைகள் அனைத்திற்கும் பள்ளிவாயிலையே தலைமை இடமாக எற்படுத்தி இருந்தார்கள். இங்கு தான் இறை விசுவாசிகள் தொழுகைக்கு கூடும் இடமாகும். அங்கு நபி அவர்களின் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள்.
 
இரண்டாவது கலிபா உமர் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஸ்க் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உரை நிகழ்த்த பல அறிஞர்களை நியமித்தார். இவர்கள் காஸ் என அழைக்கப்பட்டனர். இதற்கு கதை சொல்வோர் என்பதாகும்.
 
இவ்வறிஞர்கள்  இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் புராண கதைகள் கூறுவது போலன்றி, திருக்குரான் மற்றும் ஹதிஸ் விளக்கங்களை போதித்து வந்தனர். இவ்வாறாக பள்ளிவாசல்கள் இறை வணக்கதளமாக மட்டுமின்றி கல்விகூடங்களாக
பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிஉரைகள் நாளடைவில் பெருகி பள்ளிவாசல்களோடு இணைந்த மதராசா (கல்லூரி) களின் தோற்றத்திற்கு வழிகோலின.
 
பல்வேறு சமூகங்களோடு இணைந்து வாழும் நாம் நமது கலாச்சாரங்களை பாதுகாக்க பள்ளிவாசல்களை மார்க்க மற்றும் கலாச்சார மையமாக சமூகத்தில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் நிறுவ பட வேண்டும்.
60 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.
 
கிடைத்த இடஒதிக்கீட்டை சரியான வழியில் பயன் படுத்தவும்,  வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டவும் களமாக அமைய வேண்டியது பள்ளிவாசல்களும், அதனுடன் இணைந்த நூலகமும் தான் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துவோம்!!.
 
முஸ்லிம்களிடைய குறிப்பாக இளைஞர்களிடைய வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அரசாங்க நூலகம் இருப்பது குறைவே. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் படிப்பகங்கள் இருக்கின்றன. இங்கு அமைப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமே இருப்பது வாசிப்பவர்களை ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் அடக்கிவிடுகிறது.
 
தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தினசரி பத்திரிகைகள் வெளிவராமல் போனதற்கும்,
மாத மற்றும் வார இதழ்கள் வெற்றி பெறாமல் போனதற்கும் நூலகங்கள் நிறுவ படாததே முக்கிய காரணமாகும்

ராஜகிரி கஸ்ஸாலி




No comments:

Post a Comment