Pages

Wednesday, 3 August 2011

32. ஃபித்ரா கொடுப்பவர்களே உங்களைத்தான்...!


ஃபித்ரா கொடுப்பவர்களே உங்களைத்தான்...!

புனிதமிக்க ரமலானில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபி[ஸல்] அவர்கள் நம் மீது கடமையாக்கியுள்ளார்கள்.
  • இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.
    ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]

  • நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
இந்த தர்மம் கடமையாக்கப்பட்டத்தின் நோக்கம் நோன்புடைய காலங்களில் நாம் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாகவும், பெருநாள் அன்று ஏழைகள் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காகவும்தான். இந்த ஃபித்ராவை பொருத்தமட்டில் 95 களுக்கு முன்னால், சில்லறை காசுகளை மாற்றி வைத்துக்கொண்டு அன்றையதினம் வீட்டு தேடிவரும் ஏழைகளுக்கு வழங்குவது 

 அல்லது 

ஆலிம்ஷா-மோதினார்களிடம் வழங்குவது இப்படித்தான் பெரும்பாலான மக்கள் இந்த ஃபித்ராவை விளங்கி வைத்திருந்தனர். 

 கூட்டாக வசூலிப்பதும், ஒரு பகுதியில் திரட்டி வேறு பகுதியில் விநியோகம் செய்வதும் மார்க்க அடிப்படையில் சரியா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

அதே நேரத்தில் பரவலாக ஃபித்ரா எல்லாதரப்பு மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தோடு வசூல் செய்யப்பட்ட இந்த ஃபித்ரா இன்று இயக்கங்களின் வலிமையை எடைபோடும் எடைக்கல்லாக மாறியுள்ளதை பார்க்கிறோம். 

 ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு வந்த ஃபித்ரா தொகையை சொல்லிக்காட்டி, பார்த்தீர்களா! எங்களுக்குத்தான் சமுதாயத்தின் ஆதரவு உள்ளது என்று தம்பட்டடம் அடிப்பதையும் பார்க்கிறோம். 

மேலும், சில இயக்கங்கள் ஃபித்ராவை விநியோகிக்கும் விசயத்திலும் கீழ்கண்ட குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
  • சமுதாயத்திடம் வசூல் செய்த தொகையை விநியோகிக்கும் போது தங்கள் இயக்கம் சார்பாக இந்த கிளையில் இவ்வளவு தொகைக்கு பித்ரா பொருள்கள் விநியோகிக்கப்பட்டது என்று தங்கள் இயக்கத்தின் சொந்த பணத்தில் வழங்கியதுபோல் இயக்கத்தை முன்னிறுத்துவது.
  • வறுமையின் காரணமாக ஃபித்ரா பெறும் ஏழைகளை போட்டோ எடுத்து அதை பத்திரிக்கைகளில்/தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி அவர்களின் சுயமரியாதையை கேலிக்குரியதாக ஆக்குவது
  • ஃபித்ரா தொகை மீதமாகிவிட்டது என்று கூறி தங்களின் அமைப்பு சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு அந்த தொகையை ஒதுக்கிக்கொள்வது.
இதில் எந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்பதை அல்லாஹ் அறிந்தவன். எனவே நம்முடைய ஃபித்ரா முறையாக ஏழைகளை சென்றடைய ஒரே வழி நாமே நேரடியாக வழங்குவதுதான்.

பொதுவாக மார்க்கத்தில் எந்த தர்மமாக இருந்தாலும் முதலில் உறவினர்களில் இருந்து தொடங்கவேண்டும். அவ்வாறு உறவினர்களுக்கு நாம் நமது தர்மங்களை வழங்கும்போது இருமடங்கு கூலி கிடைக்கும் என்பது நபிமொழி. 

எனவே நமது உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்கி அவர்களை அரவணைப்போம். நமது உறவினர்களில் ஃபித்ரா பெறும் தகுதியுடைய ஏழைகள் இல்லையெனில் நமது ஊரில் உள்ள நமக்கு தெரிந்த ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்குவோம். 

ஒவ்வொருவரும் அவரவர் ஊரில் உள்ள அவரவர் உறவினர்களில்  உள்ள ஏழைகளையும், பொதுவான ஏழைகளையும்  கவனத்தில் கொண்டு செயல்பட்டாலே ஃபித்ரா பரவலாக சென்றடைந்துவிடும்.

-----------------------------------------

63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

57:18. நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.

33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

No comments:

Post a Comment