கடமைகளில் முக்கியமான ஜக்காத்
இஸ்லாமிய மாதங்களிலேயே ரமலான் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தை, மற்ற எல்லா மாதங்களுக்கும் தலைமையான மாதம் என்று அருளியுள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தை, மற்ற எல்லா மாதங்களுக்கும் தலைமையான மாதம் என்று அருளியுள்ளார்.
ஒருமாத காலம் மேற்கொள்ளப்படும் ரமலான் நோன்பானது, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க கடைப்பிடிக்கப்படுவதால், அதற்கான கூலியை நோன்பை மேற்கொள்பவருக்கு அல்லாஹ்வே நேரடியாக வழங்குகிறார் என்பதே இந்த மாதத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது.
மற்ற மாதங்களில் செய்யும் நன்மைகளை அல்லாஹ், மலக்குகளின் வாயிலாக வழங்கச் செய்கிறார்.
அல்லாஹ், நோன்பாளிகள் மீது "ஜக்காத்' என்ற ஏழை வரியைக் கடமையாக்கி உள்ளார். ஜக்காத் யார் மீது கடமை என்பதையும், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
நோன்பாளி, "லைலத்துல் கத்ர்' என்ற நாளிலோ அல்லது அதற்கு முன்போ, தன்னிடம் உள்ள சொத்து, தங்கம், மற்ற வருவாய்களில் இரண்டரை விழுக்காட்டைக் கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியான ஏழைகளுக்கு கொடுத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோன்பாளிகள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போலவே, ஏழை எளியவர்களும் அந்தப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஜக்காத் குறித்து நபிகள் நாயகம் அருளியது:
``எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. வாய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனும் ஏழைகளுக்கு உதவியை கொடுக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்''.
"நெருப்பை தண்ணீர் அழித்து விடுவது போன்று, செய்கின்ற தர்மங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன; தர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடுகின்றது; துர்மரணத்தையும் தடுக்கின்றது''.
இன்னும் இது போன்ற பல சிறப்புகள், ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதில் இருக்கின்றன. எனவே ஆண்டுக்கு ஒரு முறை "ஜக்காத்' என்ற கட்டாயக் கடமையை நாம் இப்புனித மாதத்தில் நிறைவேற்றி, ஏழைகளும் வறியோர்களும் ஈத் பெருநாளில் மகிழ்ச்சியடையும்படி செய்வோமாக
---------------------------------------------------------------
ஜகாத் தொகையை கணக்கிட ஒரு கால்குலேட்டர்
இறைவன் நமக்கு அளித்த பொருட்செல்வத்தை எவ்விதம் செலவு செய்தோம்? என்பது குறித்து நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். குறிப்பாக நாம் செலுத்த வேண்டிய ஜகாத் என்னும் ஏழை வரியை முறையாகக் கணக்கிட்டு செலுத்தினோமா? என்பது குறித்து நிச்சயமாக விசாரிக்கப்படுவோம். எனவே மறுமை வங்கிக் கணக்கின் சேமிப்பை எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுத்துகிறோமா அவ்வளவுக்கு மறுமையில் நாம் பயன் பெறலாம்.
நமது அனைத்து சொத்துக்களுக்கான ஜகாத் விகிதத்தைக் கணக்கிட இதோ ஒரு கால்குலேட்டர்.
அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்
அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித ரமளான் வாழ்த்துக்கள்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஜகாத் ம்ற்றும் ஃபித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.
அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.
சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஜகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஜகாத், ஃபித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.
ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட ஃபித்ரா மற்றும் ஜகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.
ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக.
வஸ்ஸலாம்
அ. சஜருதீன்ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்
2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்
2:110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
4:77. “உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
4:162. எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
5:12. நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”
5:55. நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்
7:156. “இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
9:11. ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து,ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
9:18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்
9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய)ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
19:31. “இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்
19:55. அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
21:73. இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
22:41. அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
22:78. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
24:56. (முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும்ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்
27:3. (அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்
30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்
31:4. அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்;ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்
58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்
73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
98:5. “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”
No comments:
Post a Comment